லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளை வெளியேற்றவும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவை நிராயுதபாணியாக்கவும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன் இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் நேரில் சந்திக்கவுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில்…
லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளை வெளியேற்றவும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவை நிராயுதபாணியாக்கவும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன் இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் நேரில் சந்திக்கவுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் லெபனான் நாட்டின் தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் லெபனானில் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.முக்கிய கோரிக்கை.. ஜூன் 26 அன்று அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை அமுல்படுத்த இஸ்ரேலுக்குத் தேவையான அழுத்தத்தை வழங்குமாறு ஜனாதிபதி டரம்பிடம் ஜனாதிபதி அவூன் கோரிக்கை வைக்கவுள்ளார். மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் வசம் உள்ள ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான எழுத்துப்பூர்வத் திட்டத்தையும் அவர் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.
லெபனானின் இறையாண்மையை மீட்டெடுக்க ஜனாதிபதி டரம்பின் தலையீடே ஒரே தீர்வு என்று லெபனான் அரசு நம்புகிறது.
முன்னதாக, அமெரிக்க ஆதரவு பெற்ற லெபனான் இராணுவத்தின் தளபதியாகப் பணியாற்றி, கடந்த ஆண்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 62 வயதான ஜோசப் அவூன், ஈரானுக்காக லெபனான் அழிக்கப்படுவதாக ஹிஸ்புல்லா அமைப்பைக் கடுமையாகச் சாடினார்.
இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால் ஹிஸ்புல்லா ஆதரவாளர்களின் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த போதிலும், நாட்டின் பாதுகாப்பைக் கருதி அவர் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.
இந்த இரு நாட்டு ஜனாதிபதிகளின் சந்திப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

