நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசேட விசாரணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு சுதந்திரமாக ஒத்துழைப்பு வழங்கும் வகையில், தற்காலிகமாக அமைச்சு பதவியிலிருந்து வில…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசேட விசாரணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு சுதந்திரமாக ஒத்துழைப்பு வழங்கும் வகையில், தற்காலிகமாக அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது, வன்முறையை ஏன் தடுக்க முடியவில்லை? "சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகளின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட நீதி அமைச்சரிடம், அங்கிருந்த அதிகாரிகள், 'எங்களுக்கு உத்தரவிட்டிருந்தால் இதனை நகத்தால் கிள்ளி எடுத்திருப்போம்' என கூறியிருந்தனர்.அதாவது, முளையிலேயே கிள்ளியெறியப்பட்டிருக்க வேண்டிய சிறிய பிரச்சினை, உரிய நேரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படாமையால் இன்று கோடரியால் வெட்டும் அளவுக்குப் பாரதூரமான நிலைமைக்குச் சென்றுள்ளது.
தடுக்கக்கூடிய நிலையில் இருந்த இந்த வன்முறையை ஏன் தடுக்க முடியவில்லை? கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதிகள் இருவர் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, அன்று மாலை 12 வெளிநாட்டுக் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். அப்படியென்றால், அன்றைய தினமே வன்முறையுடன் தொடர்புடையவர்களையும் இடமாற்றியிருக்க வேண்டும். அந்தச் சரியான தீர்மானத்தை ஏன் எடுக்கவில்லை?
நீதி அமைச்சர் இந்தச் சம்பவத்தின் பொறுப்பை ஏற்பதாகக் கூறியிருக்கின்றார். பொறுப்பை ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது. பொறுப்புக்கூறலும் அவசியம்.தற்காலிகமாக பதவி விலக வேண்டும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். அமைச்சராகப் பதவியில் இருந்துகொண்டு இந்தக் குழுவின் முன்னால் சென்று சுயாதீனமாகப் பதிலளிப்பது கடினம். எனவே, தான் குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்தவும், விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவும் அவர் தற்காலிகமாகப் பதவி விலக வேண்டும்.
புதிய அரசியல் கலாசாரம் பற்றிப் பேசும் அரசு, எதிர்க்கட்சியில் இருந்தபோது முன்வைத்த முன்மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும். கடந்த காலங்களில் பல அமைச்சர்கள் தமக்கு எதிரான விசாரணைகளுக்காகப் பதவிகளைத் துறந்து, விசாரணை முடிவடைந்த பின்னர் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட முன்னுதாரணங்கள் உள்ளன. அதைப் பின்பற்றி நீதி அமைச்சரும் செயற்பட வேண்டும்." - என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வலியுறுத்தினார்.

