இந்தியாவில் கேரள மாநிலத்தின் மதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 18 மாத குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என அதன் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 5 ஆம் திகதி, வீட்…

இந்தியாவில் கேரள மாநிலத்தின் மதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 18 மாத குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என அதன் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி, வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் உதட்டில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, சிகிச்சைக்காக பெற்றோர் குழந்தையை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் குழந்தைக்கு மயக்க மருந்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், மருந்து செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தையின் உடல்நிலை திடீரென கவலைக்கிடமானதாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக குழந்தை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தது.

தமது குழந்தையின் உயிரிழப்புக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டியுள்ள பெற்றோர், இது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், மருத்துவ சிகிச்சையில் ஏதேனும் அலட்சியம் இடம்பெற்றதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.