ஊழல் அபாயங்களைக் குறைத்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், பாரம்பரிய காகித அடிப்படையிலான சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடன முறையை நிறுத்தி, மத்தியப்படுத்தப்பட்ட மின்னணு சொத்துப் பிரகடன முறைமையை கட்டாயமாக நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைத்துள்ளது…
ஊழல் அபாயங்களைக் குறைத்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், பாரம்பரிய காகித அடிப்படையிலான சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடன முறையை நிறுத்தி, மத்தியப்படுத்தப்பட்ட மின்னணு சொத்துப் பிரகடன முறைமையை கட்டாயமாக நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைத்துள்ளது.
இதனுடன், 2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் முடிவடைந்த சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்கத் தவறிய அரச ஊழியர்களுக்கு எதிராக நிதி அபராதம், ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதற்காக ஆணைக்குழுவில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புதிய பணியாளர்களை அவசரமாக ஆட்சேர்ப்பு செய்ய வேண்டுமென அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளைத் தொடர்ந்து, அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் உயர்மட்ட நிதி குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக முன்னெடுத்து நிறைவு செய்வதற்கான பொறுப்பும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2025–2029 தேசிய ஊழல் எதிர்ப்புச் செயல்திட்டத்தின் கீழ், தனியார் துறையிலும் ஊழல் மற்றும் நிதி மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில் ஆணைக்குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்தவும், நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்களை அடையாளம் கண்டு பணமோசடியைத் தடுக்கும் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

