நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகள் குறித்தும் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து, அவர்களுக்கும் நியாயத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டங்களுக்கு இடையிலான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மருத்துவர் சங்கீத் ஜயசேகர அரச…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகள் குறித்தும் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து, அவர்களுக்கும் நியாயத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டங்களுக்கு இடையிலான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மருத்துவர் சங்கீத் ஜயசேகர அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். எந்தக் காரணத்திற்காக அவர்கள் உயிரிழந்திருந்தாலும், அந்த கைதிகள் அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்த நபர்கள் என்பதால், அவர்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து அரசாங்கம் தப்ப முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தலையீடுகளினால் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எவ்வாறு நீதி கிடைக்க வேண்டுமோ, அதேபோன்று உயிரிழந்த கைதிகளுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கைதிகளில் பெரும்பாலானோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். எனவே, அவர்களைக் குற்றவாளிகள் என்றோ அல்லது தப்புச் செய்தவர்கள் என்றோ எம்மால் பெயரிட முடியாது என தெரிவித்துள்ளார். குறித்த நபர்கள் நீதிமன்றின் பொறுப்பில் இருந்தவர்கள் எனவும் நீதிமன்றத்தினால் தான் அவர்களின் பாதுகாப்பைக் கருதி சிறைச்சாலையிடம் ஒப்படைக்கப்படடிருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, அந்தக் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்திற்குப் பாரிய பொறுப்பு உள்ளது என மருத்துவர் சங்கீத் ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கைதிகளில் பெரும்பாலானோர் மிகவும் வறிய பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களின் குடும்பத்தினருக்கு, உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளைக் கூடச் செய்துகொள்ள முடியாத அளவிற்கே நிலைமை காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். எனவே, இந்த விடயத்தை மனிதாபிமானத்துடன் பரிசீலித்து, உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு ஏதேனும் ஒரு நிவாரணத்தை வழங்குமாறு சிறைச்சாலைகள் அமைச்சர் மற்றும் அரசாங்கத்திடம் தாங்கள் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.