மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி தாமரைக்குளத்தில் இருந்து 45 வயதுடைய மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த நால்வர் பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா மகேந்தி…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி தாமரைக்குளத்தில் இருந்து 45 வயதுடைய மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த நால்வர் பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா மகேந்திரகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலின்படி, அவர் நேற்று மாலை தாமரைக்குளத்தில் மீன்பிடிக்க வலை அமைத்துவிட்டு வீடு திரும்பியிருந்தார். இன்று காலை வலையில் சிக்கிய மீன்களை எடுத்து வருவதற்காக மீண்டும் குளத்திற்குச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தேடிச் சென்றபோது, குளத்தின் நீரில் அவரது சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.