தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிப்பதையோ அல்லது வாடகைக்கு வழங்குவதையோ தவிர்க்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒருவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இடம்பெறும் அனைத்து நிதி பரிவர்த்…

தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிப்பதையோ அல்லது வாடகைக்கு வழங்குவதையோ தவிர்க்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒருவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இடம்பெறும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும் அந்தக் கணக்கின் உரிமையாளரே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும் என்று மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

சிலர் மாதாந்திர பணம் பெற்றுக்கொண்டு தங்களது வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இவ்வாறு பயன்படுத்தப்படும் கணக்குகள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படும் அபாயம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், தங்களுக்குத் தெரியாமலேயே பிறரின் சட்டவிரோத செயல்களில் தொடர்புடையவர்களாகக் கருதப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

எனவே, தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை பிறருடன் பகிர்வதையோ அல்லது எந்தவொரு காரணத்திற்காகவும் பயன்படுத்த அனுமதிப்பதையோ தவிர்த்து, இதுபோன்ற மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.