எதிர்வரும் மாதங்களில் எல்நினோ காலநிலை காரணமாக கடுமையான வரட்சி நிலை உருவாகும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச மக்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த வரட்சி நிவாரண குடிநீர் நிதி நிறுத்தப்பட்டமை குறித்து அரசாங்கம் விளக்…
எதிர்வரும் மாதங்களில் எல்நினோ காலநிலை காரணமாக கடுமையான வரட்சி நிலை உருவாகும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச மக்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த வரட்சி நிவாரண குடிநீர் நிதி நிறுத்தப்பட்டமை குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் வலியுறுத்தியுள்ளார்.
செங்கலடியில் நடைபெற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 14ஆவது அமர்வில் உரையாற்றிய அவர், பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்த குறித்த நிதி சுற்றறிக்கை ஒன்றின் அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஏறாவூர் பற்று பிரதேசம் ஆண்டுதோறும் கடுமையான வரட்சியால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாகும் என்றும், குறிப்பாக பதுளை வீதியை அண்மித்த பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீண்டகாலமாக நிலவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அப்பகுதி மக்களின் அடிப்படை குடிநீர் தேவையை இதுவரை நிரந்தரமாக தீர்க்க முடியாத சூழ்நிலையில், வரட்சி நிவாரண நிதியையும் நிறுத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என அவர் தெரிவித்தார்.
எல்நினோ தாக்கத்தை முன்னிட்டு நாட்டில் வரட்சி நிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ள நிலையில், குடிநீர் வசதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தியதற்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் செ. நிலாந்தன் வலியுறுத்தினார்.
மேலும், இந்த முடிவுக்குப் பொறுப்பு அரசாங்கத்துக்கா அல்லது அதிகாரிகளுக்கா என்பது தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், நிறுத்தப்பட்ட நிதியை உடனடியாக மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, அரசாங்கத்தின் நிதி கிடைக்காவிட்டாலும், பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்படும் என ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மு. முரளிதரன் சபையில் உறுதியளித்தார்.

