வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும் அதனைத் திட்டமிட்டு தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள், வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத வணிகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது. 2026…

வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும் அதனைத் திட்டமிட்டு தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள், வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத வணிகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

2026 ஜூன் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இணங்கத் தவறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் அதிகாரம் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆணையாளர் நாயகத்திடம் பதிவு செய்யத் தவறுதல், வருமான வரி அறிக்கைகள் அல்லது வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதது உள்ளிட்ட செயல்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணக்கமற்ற வரி செலுத்துபவர்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் வழங்கப்படும். அந்த அறிவித்தல் வழங்கப்பட்ட நாளிலிருந்து குறைபாடுகளைச் சரிசெய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.அந்த 30 நாட்களுக்குள் சட்டத்திற்கிணங்க நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது குற்றமாகப் பதிவு செய்யப்படும்.

அதனைத் தொடர்ந்து நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் சுருக்க விசாரணையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 400,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.

இந்தச் சட்ட ஏற்பாடுகள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரை மட்டுமே குறிவைத்து அமுல்படுத்தப்படுகின்றன என்றும், சட்டத்திற்கிணங்க ஒத்துழைப்பு வழங்கும் வரி செலுத்துபவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.