பெங்கொக்கில் உள்ள டான் முவாங் சர்வதேச விமான நிலையத்தில், மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு இலங்கை குடும்பத்தை கஜகஸ்தானுக்குக் கடத்த முயன்ற சர்வதேச கடத்தல் கும்பலின் திட்டத்தை தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர். அந்நாட்டு ஊடகமொன்றின் தகவலின்படி, இந்த இலங்கை குடு…
பெங்கொக்கில் உள்ள டான் முவாங் சர்வதேச விமான நிலையத்தில், மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு இலங்கை குடும்பத்தை கஜகஸ்தானுக்குக் கடத்த முயன்ற சர்வதேச கடத்தல் கும்பலின் திட்டத்தை தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
அந்நாட்டு ஊடகமொன்றின் தகவலின்படி, இந்த இலங்கை குடும்பம் முதலில் தங்கள் சொந்த கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தாய்லாந்திற்குள் நுழைந்து, பின்னர் தரை வழியாக மலேசியாவிற்குப் பயணம் செய்துள்ளது.
அதன் பிறகு, அவர்கள் மலேசிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தாய்லாந்திற்குள் நுழைந்து கஜகஸ்தானுக்கு விமானம் மூலம் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களுடன் சென்ற ஒரு மலேசியப் பெண், அங்கிருந்த இரண்டு குழந்தைகளுக்கும் தானே உயிரியல் தாய் என்று பொய்யாகக் கூறியுள்ளார்.சர்வதேச கடத்தல் கும்பல்
இருப்பினும், விமான நிறுவன அதிகாரிகள் அவர்களின் பயண ஆவணங்களில் இருந்த முரண்பாடுகளைக் கண்டறிந்து அவர்களை விமானத்தில் ஏற அனுமதிக்காததால், அக்குழுவினர் தங்களின் பயண வழியை மியான்மருக்கு மாற்றியுள்ளனர்.Image Credit: Bangkok Post
இந்த விவகாரம் குறித்து குடிவரவுத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் ஒரு நாளில், அக்குழுவினர் மியான்மரிலிருந்து டான் முவாங் சர்வதேச விமான நிலையம் வழியாக கஜகஸ்தானுக்குச் செல்ல முயன்றபோது, குடிவரவு அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கைப் பெண்ணும் அவரது மூத்த பிள்ளையும் மற்றவர்களுக்குச் சொந்தமான மலேசிய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதும், இளைய பிள்ளை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்திப் பயணம் செய்ததும் தெரியவந்துள்ளது.
மலேசியாவில் செயல்பட்டு வரும் இந்த குறிப்பிட்ட சர்வதேச கடத்தல் கும்பல் குறித்து பிரித்தானியா, கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஏற்கனவே பிராந்திய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.மலேசிய கடவுச்சீட்டு இந்த கும்பல் வெளிநாட்டு குழந்தைகளை மலேசியாவிற்குள் கடத்தி வந்து, போலி பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று, அதன் மூலம் அதிகாரப்பூர்வ மலேசிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.Image Credit: The Straits Times
இதன்படி, இந்த கடவுச்சீட்டுகள் மூலம் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு விசா இன்றி நுழைய முடியும் என்பதை அவர்கள் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
தற்போது, பயண ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் குற்றச் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இரண்டு வயது வந்த பெண்களையும் தாய்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, நல அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு, அந்த இரு சிறு பிள்ளைகளும் மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பிள்ளைகள் இருவரும் தற்போது பாதுகாப்பான பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தூதரகம் மூலம் அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் திருப்புவதற்கான நடவடிக்கைகளைத் தாய்லாந்து அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

