வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.…
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், புதிய திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் தங்களது தேவைக்கேற்ப ஓய்வூதிய முறையைத் தேர்வு செய்யும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதன்படி, ஓய்வுக்குப் பின்னர் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவதா அல்லது பணிக்காலம் நிறைவடைந்ததும் சேமிக்கப்பட்ட முழுத் தொகையையும் ஒரே தடவையில் பெற்றுக்கொள்வதா என்பதை தொழிலாளர்களே தீர்மானிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
மேலும், சட்டபூர்வமான வெளிநாட்டு பண அனுப்பல்களின் பதிவுகளை துல்லியமாக பராமரிப்பதற்கும், ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து விசேட செயலி ஒன்றும் உருவாக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
‘ரதவிரு’ ஓய்வூதியத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக குவைத் நிதியத்தால் ரூ.2.1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். 2025ஆம் ஆண்டில் நாட்டின் வரலாற்றிலேயே அதிகளவிலான வெளிநாட்டு பணவரவு பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ள நிலையில், அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களை இணைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த புதிய தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மத்திய வங்கி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சின் கூட்டு ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

