வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகா…

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதான கலந்துரையாடல் நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.இந்தக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை விளங்குவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முறையான ஓய்வூதியத் திட்டமொன்று அவசியம் எனத் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இதன்போது, சுற்றுலாத்துறை தொடர்பான திட்டங்களை மாவட்ட மட்டத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாவட்ட செயலாளர்களுக்கு நேரடியாக வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா குழுக்களின் ஒருங்கிணைப்புடன் திட்டங்களை விரைவாக முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், சிகிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை பகுதிகளை மையமாகக் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக செயல்படுவதற்குப் பதிலாக ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் செயற்படுவதன் மூலம் காலதாமதத்தையும் வள விரயத்தையும் குறைக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலிருந்தே கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கக்கூடிய வகையில் நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

சுற்றுலா அமைச்சின் கீழ் காணப்படும் நிர்மாணத் துறை போன்ற தனித்துவமான கொள்முதல் தேவைகளுக்காக விசேட தலையீடுகளை மேற்கொண்டு செயல்முறைகளை விரைவுபடுத்தவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள ஆசிய ஒளிபரப்பாளர்கள் மாநாடு உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், தூதரக சேவைகளை மேலும் வினைத்திறனாக்குவதற்காக டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து புதிய திட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள வளங்கள் மற்றும் காணிகள் தொடர்பான முழுமையான அறிக்கைகள் கடந்த காலங்களில் முறையாகத் தயாரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதற்கான அறிக்கையை விரைவாகத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சுமார் 8 இலட்சம் மனித வளம் தேவைப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய, ஹோட்டல் பாடசாலைகள் ஊடாக வழங்கப்படும் பயிற்சிப் பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.