துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடற்கூறு பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் நேற்று(17) நடைபெற்றுள்ளன. விசாரணையின் ஆரம்ப கட்டமாக, கொழும்பு கிழக்கு முல்லேரியாவைச் சேர்ந்த நீதிமருத்துவ அதிகாரி, முன்னாள் பொலிஸ் மா அதி…
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடற்கூறு பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் நேற்று(17) நடைபெற்றுள்ளன.
விசாரணையின் ஆரம்ப கட்டமாக, கொழும்பு கிழக்கு முல்லேரியாவைச் சேர்ந்த நீதிமருத்துவ அதிகாரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் வசித்த வீட்டிற்கு சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து, தேவையான மருத்துவ குறிப்புகளைப் பதிவு செய்தார். தவறான முடிவு நீதிமருத்துவ மற்றும் நீதவான் விசாரணைகளின் மூலம் இது தவறான முடிவு என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி அவரது உடலுக்கு பொலிஸ் சீருடை அணிவிக்கவோ அல்லது பொலிஸ் மரியாதை செலுத்தவோ முடியாது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பொலிஸ் வரலாற்றில், பொலிஸ் மா மா அதிபராக பதவி வகித்த ஒருவர் தவறான முடிவால் உயிரிழந்த முதல் சம்பவம் இதுவாகும்.
இதற்கு முன்பும் தவறான முடிவு செய்து கொண்ட எந்த பொலிஸ் அதிகாரிக்கும் அதிகாரப்பூர்வ பொலிஸ் மரியாதை வழங்கப்படவில்லை என்றும் உயர் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று(17) காலை மாலபே – தலஹேன பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றது.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அளித்த வாக்குமூலத்தின்படி, "ஆய்வு செய்ய வேண்டும்" என்று கூறி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது சேவைத் துப்பாக்கியை கேட்டுள்ளார்.பின்னர், ஒரு தண்ணீர் கொண்டு வருமாறு காவலரை வெளியே அனுப்பியுள்ளார். அதன்பிறகே துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகளில், அவரது மார்புப் பகுதியில் ஒரு தோட்டா பாய்ந்திருந்தது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்தே அந்த ரிவால்வர் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டது.
பொலிஸாரின் தகவலின்படி, நேற்று காலை வழக்கம்போல தனது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். காலை சுமார் 7.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பு உடனடியாக குடும்பத்தினரும் அயலவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் அவரை இரத்தக் காயங்களுடன் முல்லேரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
உயிரிழக்கும் போது அவர் அறுபது வயதை கடந்திருந்ததுடன், இரண்டு மகன்களின் தந்தையாக இருந்தார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் தலங்கம பொலிஸார் மற்றும் பல உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
நீதியியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் உள்ளிட்ட குழுக்கள் அறிவியல் ஆதாரங்களை சேகரித்தனர்.தற்போதைய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில் இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸ் வட்டாரங்களின் தகவலின்படி, அண்மைக்காலமாக அவரது குடும்பத்தில் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தமும் குடும்பத் தகராறும் இந்த துயரமான முடிவிற்கு காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவரது மகனின் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும், அதோடு குடும்ப வன்முறை குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவிலும் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.வாழ்க்கையின் இறுதிக் கட்டம் தான் பல ஆண்டுகள் கண்ணியமாக வழிநடத்திய பொலிஸ் அமைப்பே தனது குடும்ப விவகாரத்தில் நடந்துகொண்ட விதமும், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளும் அவரை மனரீதியாக மிகவும் பாதித்ததாக நெருங்கியவர்களிடம் தெரிவித்துள்ளார். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் எதிர்கொண்ட இந்த குடும்பப் பிரச்சினை மற்றும் அதனால் ஏற்பட்ட சமூக அவப்பெயரை தாங்க முடியாமல் அவர் கடுமையான மனவேதனையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சி.டி. விக்ரமரத்ன மத நம்பிக்கையுடன் வாழ்ந்தவர். அவர் இறைச்சி உணவுகளைத் தவிர்த்ததுடன், மது மற்றும் புகைப்பழக்கங்களிலிருந்தும் முற்றிலும் விலகி வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
அவருடன் பொலிஸ் பயிற்சியில் இணைந்து பயின்ற ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பொன்சேகா, பொலிஸ் மா அதிபராக இருந்த காலத்திலும் அவர் தியான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

