விவசாயிகளின் வாழ்வாதாரமே அரசின் முன்னுரிமை – ஜனாதிபதி வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join தற்போதைய அரசாங்கம் விவசாய மக்களைப் பாதுகாக்கும் அரசாங்கமாகும் என்றும், அவர்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கை, சமூக மதிப்பு மற்றும் கௌரவத்தைப…
விவசாயிகளின் வாழ்வாதாரமே அரசின் முன்னுரிமை – ஜனாதிபதி
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
தற்போதைய அரசாங்கம் விவசாய மக்களைப் பாதுகாக்கும் அரசாங்கமாகும் என்றும், அவர்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கை, சமூக மதிப்பு மற்றும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
உர மானியத்தை இரு மடங்காக அதிகரித்தல், டித்வா சூறாவளி காரணமாக சேதமடைந்த பயிர்ச்செய்கை நிலங்களுக்கு வரலாற்றில் மிகக் கூடிய நட்டஈட்டுத் தொகையை வழங்குதல், நெல் கொள்வனவுக்காக வரலாற்றில் அதிகளவிலான நிதியை ஒதுக்குதல், பாரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பித்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை உட்பட விவசாய மக்களுக்காகக் குறிப்பிடத்தக்க அளவிலான பணிகளை அரசாங்கம் நிறைவேற்றி வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (வெள்ளிக்கிழமை ) முற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
அநுராதபுர மாவட்டத்தின் பதவிய, கெபிதிகொல்லேவ, ஹொரவப்பொத்தான மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் நீண்டகால சிறுநீரக செயலிழப்பு நோய்க்கு ஒரு தீர்வாக, அப்பிரதேசத்திலுள்ள 67,000 குடும்பங்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன், இலங்கையிலுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
1990 ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து இப்பிரதேசங்களில் பரவி வரும் அடையாளம் காணப்படாத சிறுநீரக நோய்க்கு (CKD) சுத்தமான குடிநீர் இல்லாமையே பிரதான காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனவே இத்திட்டம் வெறும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மட்டுமல்லாது, மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதாகும் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

