கனகராஜா சரவணன் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்டு, மட்டக்களப்பு சிறையிலடைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர், திங்கட்கிழமை (20) பிற்பகல் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றக் கைதிகள் கூட்டிற்குள் வைத்து, தன்னுயிரை மாய்க்க முயற்சித்த…
கனகராஜா சரவணன்
பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்டு, மட்டக்களப்பு சிறையிலடைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர், திங்கட்கிழமை (20) பிற்பகல் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றக் கைதிகள் கூட்டிற்குள் வைத்து, தன்னுயிரை மாய்க்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள கடை ஒன்றில் 16,000 ரூபாவைத் திருடியது மற்றும் கடையொன்றை உடைத்துத் திருடியது உள்ளிட்ட மூன்று திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக, குறித்த நபர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
எனினும், பிணையில் வெளிவந்த அவர் நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்ததால், அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதனையடுத்து, கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், 15ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அன்று அவரை 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்ததையடுத்து, அவர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணைக்காக, திங்கட்கிழமை (20) அன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்றக் கைதிகள் அறையில் தடுத்து வைக்கப்பட்டார். திறந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் அவரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் மீண்டும் நீதிமன்றக் கைதிகள் கூடிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், பிற்பகல் 3.00 மணியளவில், கைதிகள் கூடிற்குள் இருந்த மலசலகூடத்திற்குச் சென்ற குறித்த நபர், தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு, உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரும், தடயவியல் பொலிஸ் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டி பகுதியைச் சேர்ந்த தனஞ்சே புஸ்பகுமார் (வயது 31) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும், இவர் மீது மட்டக்களப்பு நீதிமன்றில் மூன்று திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

