யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் வீதிவியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிலர் மீது விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாத்துறை தலைவர் விவேகானந்தர…
யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் வீதிவியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிலர் மீது விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாத்துறை தலைவர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை நேற்று (10) யாழ்ப்பாண பொலிஸாரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் கோட்டைச் சுற்றுவட்டாரம், மத்திய பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சுற்றுவட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு இடையூறாக யாசகம் மேற்கொள்ளப்படுவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்ததாக கூறினார்.
இதனையடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டதுடன், யாழ்ப்பாண மாநகர சபையின் ஒத்துழைப்புடனும் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நடவடிக்கையின் போது, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் சில வீதிவியாபாரிகள் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களது விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில சிறுவர்கள் யாசகம் பெறும் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாகவும், அவர்களுடன் இருந்த பாதுகாவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாகவும் வட மாகாண சுற்றுலாத்துறை தலைவர் விவேகானந்தராஜா தெரிவித்தார்.

