யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் இன்று (10) யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார். இது…

யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் இன்று (10) யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண நகரின் சுத்தம், ஒழுங்கு மற்றும் சுற்றுலா நட்பு சூழலை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் கூறினார்.முறைப்பாடுகள்

குறிப்பாக யாழ்ப்பாணக் கோட்டைச் சுற்றுவட்டம், மத்திய பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சுற்றுப்பகுதிகளில் யாசகம் என்ற பெயரில் வியாபார நிலையங்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்திருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டதுடன், யாழ்ப்பாண மாநகர சபையின் ஒத்துழைப்பும் கோரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, யாழ்ப்பாண மாநகர சபையின் ஒத்துழைப்புடன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் யாசகத்தின் பெயரில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களது விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், சொந்த பகுதிகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையின் போது சிறுவர்கள் பலரும் யாசகம் பெறும் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டதாகவும், அவர்களின் பாதுகாவலர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இனிமேல் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதிமொழி பெறப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.