யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளில் தற்போது வைத்தியர்கள் கடமையாற்றி வருவதுடன், எதிர்காலத்தில் சிறைச்சாலை வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழ…
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளில் தற்போது வைத்தியர்கள் கடமையாற்றி வருவதுடன், எதிர்காலத்தில் சிறைச்சாலை வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை(09) நிலையியற் கட்டளை 27/2-இன் கீழ், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வவுனியா சிறைச்சாலையில் வைத்தியர் வை. ரூபசிங்கமும், யாழ்ப்பாண சிறைச்சாலையில் வைத்தியர் கோபிகிருஷ்ணனும் கடமையாற்றி வருகின்றனர்.
சிறைச்சாலை வைத்தியசாலைகளில் இருவர் அல்லது மூவர் பணியாற்றுவதுடன், அவர்கள் 6 மணித்தியாலங்கள் நேரடிச் சேவையிலும், தேவைப்படும் பட்சத்தில் தொலைபேசி வாயிலாகவும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். சிறைச்சாலைகளில் ஏதேனும் அவசர நிலைமைகள் ஏற்படும் போது, தேவையான சிகிச்சைகளை வழங்க முறையான ஏற்பாடுகள் உள்ளன; மேலதிக சிகிச்சைகள் தேவைப்படும் கைதிகள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
சிறைச்சாலை வைத்தியசாலைகளுக்குத் தேவையான சகல மருந்துகளும் இருப்பு உள்ளன என்றும், அந்தந்த சிறைச்சாலைகளின் தேவைக்கேற்ப மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வெளியில் ஆரோக்கியமாக இருந்து சிறைச்சாலைக்குச் சென்றதன் பின்னர் நோய்வாய்ப்படும் கைதிகளுக்குப் பல்வேறு மருத்துவ ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
சிறைச்சாலைகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்களா என்பது குறித்த விவரங்களைச் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் கோரியுள்ளதாகவும், அந்தத் தகவல் கிடைத்தவுடன் சபைக்கு அறிவிப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

