யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடத்தல் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இரு கூரிய வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கூறப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடத்தல் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இரு கூரிய வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கூறப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அருகே இளைஞர் ஒருவர் ஐவர் கொண்ட குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரை கைதடி பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கியதுடன், காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலை அருகே விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றை வீதிச் சோதனையில் பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது, அது நிற்காமல் வேகமாகச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பொலிஸார் வாகனத்தைத் துரத்திச் சென்று இடைமறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையின் போது காரிலிருந்து இரண்டு கூரிய வாள்கள் மீட்கப்பட்டதுடன், வாகனத்தின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும், இரத்தக் கறை படிந்த சட்டை ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 2.5 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.