போலந்தில் உள்ள வோக்ஸ்வேகன் (Volkswagen) கார் தொழிற்சாலையில் 100 ஆடுகள் 'வேலைக்கு' அமர்த்தப்பட்டிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. போலந்து நாட்டின் போஸ்னான் (Poznań) பகுதியில் வோக்ஸ்வேகனின் புகழ்பெற்ற கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையின் வளாகத்தில் பிரம்மாண…
போலந்தில் உள்ள வோக்ஸ்வேகன் (Volkswagen) கார் தொழிற்சாலையில் 100 ஆடுகள் 'வேலைக்கு' அமர்த்தப்பட்டிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
போலந்து நாட்டின் போஸ்னான் (Poznań) பகுதியில் வோக்ஸ்வேகனின் புகழ்பெற்ற கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையின் வளாகத்தில் பிரம்மாண்டமான சூரிய ஆற்றல் (Solar panel) மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோலார் பேனல்களுக்கு அடியில் புற்கள் செழித்து வளர்ந்து காணப்பட்டன.
இப்புற்களை இயந்திரங்களைக் கொண்டு வெட்டும்போது, அவை சூரிய ஆற்றல் தகடுகளைச் சேதப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இச்சவாலைத் தவிர்ப்பதற்காக, சுமார் 100 ஆடுகள் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளன. இந்த ஆடுகளின் பணி, வளாகத்தில் உள்ள புற்களை மேய்ந்து அவற்றைச் சுத்தமாக அகற்றுவதாகும்.
புல்வெட்டும் இயந்திரங்கள் இயங்குவதால் ஏற்படும் கார்பன் உமிழ்வு மற்றும் சத்த மாசுபாடு இந்த ஆடுகளின் பயன்பாட்டால் முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகிறது. மேலும், ஆடுகளுக்குத் தேவையான இயற்கை உணவு கிடைப்பதுடன், தொழிற்சாலை வளாகமும் ரசாயனங்கள் இன்றி இயற்கையான முறையில் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.
நவீன தொழில்நுட்பத்தோடு இயற்கையையும் இணைக்கும் வோக்ஸ்வேகனின் இந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சி, சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

