1986 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் டியாகோ மராடோனா தனது புகழ்பெற்ற 'கடவுளின் கை' (Hand of God) இலக்கினை அடித்த கால்பந்து, ஏலத்தில் 2.5 மில்லியன் பவுண்டுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டியில், இங்க…

1986 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் டியாகோ மராடோனா தனது புகழ்பெற்ற 'கடவுளின் கை' (Hand of God) இலக்கினை அடித்த கால்பந்து, ஏலத்தில் 2.5 மில்லியன் பவுண்டுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டியில், இங்கிலாந்து கோல்காப்பாளர் பீட்டர் ஷில்டனைத் தாண்டி மராடோனா தனது கையால் பந்தைத் தட்டி கோல் அடித்தார். இதுவே பின்னர் 'கடவுளின் கை' கோல் என்று பிரபலமானது.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மராடோனா, அந்த இலக்கு "சிறிது மராடோனாவின் தலையாலும், சிறிது கடவுளின் கையாலும்" அடிக்கப்பட்டது என்று கூறினார்.

அதே போட்டியில், இங்கிலாந்தின் ஐந்து கள வீரர்களையும் ஏமாற்றி, பந்தைக் கடத்திச் சென்று ஷில்டனைத் தாண்டி அவர் அடித்த மற்றொரு கோல் பின்னர் 'நூற்றாண்டின் கோல்' (Goal of the century) என்று அழைக்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள 'ஹெரிடேஜ் ஏல நிறுவனம்' (Heritage Auctions) நடத்திய ஏலத்தில் இது 3.3 மில்லியன் டொலர்களுக்கு (2.5 மில்லியன் பவுண்டுகள்) விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், இந்தப் பந்து கிட்டத்தட்ட 10 மில்லியன் டொலர்களைப் (7.3 மில்லியன் பவுண்டுகள்) பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஏலத்திற்கு முன்பு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ஹெரிடேஜ் நிறுவனத்தின் சிறப்பு ஏல நிபுணர் மைக் புரோவென்சேல் கூறுகையில், "இது முற்றிலும் தனித்துவமான ஒரு பொருளாகும். கால்பந்து வரலாற்றில் இருக்கும் மிக முக்கியமான பொருள் இதுவே என வாதிடலாம்" என்றார்.

1986 ஆம் ஆண்டு நடைபெற்ற இப்போட்டியை நடுவகித்த துனிசியாவைச் சேர்ந்த அலி பின் நாசர், முழு நேர முடிவில் அந்த அடிடாஸ் அஸ்டெகா (Adidas Azteca) பந்தைப் பெற்று, அதனை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தன்வசம் பாதுகாத்து வந்தார்.

இதுவே அந்தப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஒரே பந்து என்பதை உறுதிப்படுத்தும் கடிதம் ஒன்றில் அவர் 2023 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டதுடன், அது மேலும் பல சுயாதீனமான சான்றிதழ்கள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பின் நாசர் இந்தப் பந்தை 2022 ஆம் ஆண்டில் 2.37 மில்லியன் டொலர்களுக்கு (1.74 மில்லியன் பவுண்டுகள்) விற்றிருந்தார். அதன் புதிய உரிமையாளர் இதனை மீண்டும் 2023 ஆம் ஆண்டில் ஏலத்திற்குவிட்ட போதிலும், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையை ஏலத் தொகைகள் எட்டாததால் அது விற்பனை செய்யப்படவில்லை.

இதேவேளை, அதே போட்டியில் மராடோனா அணிந்திருந்த ஜெர்சி 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஏலத்தில் 7.1 மில்லியன் பவுண்டுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.