அவுஸ்திரேலியக் கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி, மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு 'பி' அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெ…

அவுஸ்திரேலியக் கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி, மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு 'பி' அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், திறைசேரியின் செயலாளர் இலங்கைப் பிரஜையே தவிர அவர் வெளிநாட்டுப் பிரஜையல்லர் எனவும், அவருக்கு இரட்டைக் குடியுரிமை கிடையாது எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். வெளிநாட்டுப் பிரஜையல்ல இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது, "அவுஸ்திரேலியக் கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு எதனையும் மறைக்கவில்லை.இந்த விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சால் கடந்த 2026.03.24 ஆம் திகதி விசேட தொழில்நுட்ப குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைக்கமைய, கடந்த 2026.03.27 ஆம் திகதி விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

நிறுவன மட்டத்திலான உள்ளக விசாரணைகளுக்கு அமைய, இந்த மோசடி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு அதிகாரிகள் தற்காலிகமாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் குறித்து கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு 'பி' அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திறைசேரியின் செயலாளர் இலங்கைப் பிரஜையே தவிர அவர் வெளிநாட்டுப் பிரஜையல்ல என்றும், அவருக்கு இரட்டைக் குடியுரிமை கிடையாது என்பதையும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.