22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று (01) உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளன. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசா…
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று (01) உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளன.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு நேற்று (31) நிறைவடைந்தது.
குறித்த சட்டமூலம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சில மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் இந்தத் திருத்தம் அமைந்துள்ளதாகவும், சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் அதனை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சட்டமூலத்திற்கு ஆதரவான மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுக்களைப் பரிசீலிப்பதற்காக பிரதம நீதியரசரால் நேற்று ஐவரடங்கிய நீதிபதிகள் அமர்வு நியமிக்கப்பட்டது.
இந்த அமர்வில் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவுடன் நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதன்படி, இன்று காலை 10 மணி முதல் உயர்நீதிமன்றத்தில் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.

