22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அவசரமாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அ…
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அவசரமாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தமிழரசுக் கட்சி இலங்கையில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக 20க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிறீதரன் தெரிவித்துள்ளார். அந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் எந்த நிலையை அடையவுள்ளன என்பதை தமிழரசுக் கட்சி உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கடந்த வாரம் Zoom வழியாக கட்சியின் உயர்மட்டக் குழுவினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடியதாகவும், குறித்த கலந்துரையாடலின் அடிப்படையில், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அவசரப்பட்டு எந்தவொரு கருத்தையோ தீர்மானத்தையோ வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இறுதி தீர்மானம் குறிப்பாக, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழியும் நிலையில், அதே நீதிபதிகளே குறித்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்புகளை வழங்கவுள்ளதாகவும் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பொறுமையுடன் காத்திருந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவதானிப்பதுடன், மக்களின் கருத்துக்களையும் ஆராய்ந்த பின்னரே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கட்சியின் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அதுவரை இந்த விடயம் தொடர்பில் பொறுத்திருப்பதே தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening












