அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீள பெறப் போவதில்லை என அவர் குறிப்பிடுவது நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டுச் செயற்படத் தயாராக இருப்பத…
அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீள பெறப் போவதில்லை என அவர் குறிப்பிடுவது நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டுச் செயற்படத் தயாராக இருப்பதையே மறைமுகமாகக் காட்டுகின்றது என்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். கொழும்பில் நேற்று (27.08.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.சர்வதேச மட்டங்களில் கடுமையான எதிர்ப்பு
அவர் மேலும் கூறுகையில், எவ்விதமான விரிவான கலந்துரையாடல்களும் இல்லாமல் நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்குத் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு, இந்த தீர்மானத்தை மீள் பரிசீலிக்குமாறு மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்தியுள்ளனர்.நீதிபதிகளின் பதவிக்காலம் இந்த சட்டமூலம் தற்போது உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், எவருக்காகவும் அதனை மீளப்பெறப் போவதில்லை என ஜனாதிபதி கூறுவது, நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட அரசாங்கம் தயாராகின்றது என்பதையே வெளிப்படுத்துகின்றது.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிப்பது அரசாங்கத்திற்கு மட்டுமே சாதகமாக அமையுமே தவிர, நாட்டு மக்களுக்கு அதனால் எந்தவிதப் பயனும் கிடைக்கப் போவதில்லை. அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நீதித்துறையை மாற்றியமைக்கும் இவ்வாறான முயற்சிகள் முற்றிலும் தவறானவை என்றார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12












