பரபரப்புகளின் மையமாக உள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) சமர்ப்பிக்கப்பட்டது. இது நிறைவேற்றப்பட்டால், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வூதிய வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வூதிய வயது 65 ஆகவும் நீடிக்க வகை ச…

பரபரப்புகளின் மையமாக உள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம்  பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) சமர்ப்பிக்கப்பட்டது.

இது நிறைவேற்றப்பட்டால், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வூதிய வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வூதிய வயது 65 ஆகவும் நீடிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சட்டமூலத்தின் மூலம் பிரதம நீதியரசரின் ஓய்வூதியக் காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. “பிரதம நீதியரசரின் ஓய்வூதியக் காலம் என்பது அவர் அறுபத்தேழு வயதை எட்டும் திகதியாகும் அல்லது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆறு வருட காலம் பூர்த்தியடையும் தேதியாகும்; இதில் எது முற்படுகிறதோ அதுவே பொருந்தும்” எனச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, நீதித்துறை திருத்தச் சட்டமூலமானது நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை 62 வரை நீட்டிப்பதோடு, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 110 இலிருந்து 120 ஆக அதிகரிக்கவும் வழிவகுக்கிறது.

22ஆவது திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுவது இச்சட்டத்திற்கு எதிரான சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும். சட்டத்தின்படி, சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்துவதற்கு எவருக்கும் ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், இந்தச் சட்டத்திற்கு விசேட பெரும்பான்மையுடன் மக்களால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என கோரவுள்ளதாகவும் 'சுதந்திர சட்டத்தரணிகள்' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தியன்னகோவன் தெரிவித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழுக்களும் இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்ய எதிர்பார்க்கின்றன. இந்தத் திருத்தத்திற்கு எதிராக இந்த வாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு சட்டமூலங்களும் கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிலையில், மகாநாயக்க தேரர்கள் உட்பட பலர் தமது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.