அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று மனுக்களின் பிரதிகளும், “நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்க…

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று மனுக்களின் பிரதிகளும், “நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதியொன்றும் தனக்குக் கிடைத்திருப்பதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன  பாராளுமன்றத்தில், புதன்கிழமை (19) அன்று அறிவித்தார்.

சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட திகதி மற்றும் பின்னணி:

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஓகஸ்ட் 18 ஆம் திகதி இந்த இரு சட்டமூலங்களும் முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

உள்ளடக்கப்பட்ட முக்கிய விவகாரங்கள்:

ஓய்வூதிய வயது எல்லையை நீடித்தல்: நாட்டின் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் இலட்சக்கணக்கான வழக்குளை விரைவுபடுத்தும் மற்றும் நீதித்துறையின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் மாற்றுவதற்குக் குறித்த “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” வழிவகை செய்கிறது. மேலும், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுடன் இணைந்ததாக ஏனைய நீதிமன்றங்களான மேல் நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காகவே “நீதித்துறை (திருத்தம்)” சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக உயர்த்துவதற்கான பரிந்துரைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.