நாட்டின் ஈரவலயத்தில் அமைந்துள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்பில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றபோதிலும், உலர் வலயத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரிய…
நாட்டின் ஈரவலயத்தில் அமைந்துள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்பில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றபோதிலும், உலர் வலயத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மொனராகலை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சில நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு தற்போது 30 சதவீதத்தை விடவும் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த நீர் கொள்ளளவு 36 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.பொதுவாக ஒகஸ்ட் மாதத்தில் வறண்ட வானிலை நிலவியபோதிலும், இந்த ஆண்டில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக அந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நிலவும் அதிக வெப்பம் காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் வேகமாக ஆவியாகி வற்றிப்போதல் இடம்பெறுகிறது.
இந்த நிலைமையின் கீழ் நீர் தேவை அதிகரிக்கும் அதேவேளையில், நீர்வளம் வேகமாகச் சுருங்கி வருகிறது.
இதனால் கடும் வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் குடிநீர் தேவை மற்றும் சுற்றாடல் தேவைகளுக்காக நீரை ஒதுக்கீடு செய்ய நேரிடுவதால், விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை விநியோகிப்பது கடினமாக அமையக்கூடும் என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டுகிறார்.
குடிநீர் விநியோகம் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என்றபோதிலும், சில பகுதிகளுக்கான விவசாயத்திற்காக விநியோகிக்கப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இந்த சவாலான நிலைமையை எதிர்கொள்வதற்கான ஒரே மாற்று வழி, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் சுற்றாடலுக்கு இணக்கமாக வாழ்வதும் ஆகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதுடன், அது மிக வேகமாகப் பரவும் அபாயமும் காணப்படுவதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இது குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், எதிர்கால காலநிலை மாற்றங்களுக்குத் தயாராகும் வகையில் எல் நினோ கணிப்புகள் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வுடன் இருப்பதன் முக்கியத்துவத்தையும் நீர்ப்பாசன பணிப்பாளர் இங்கு மேலும் வலியுறுத்தினார்.
இதேவேளை, எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது.
அத்துடன், 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் எல் நினோ நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்கத்தின் காரணமாக 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீரை விநியோகிக்கவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைவாக, 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.












