லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹொரண தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன், அவர் இ…
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹொரண தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன், அவர் இதுவரை வகித்த அனைத்துக் கட்சிப் பதவிகளிலிருந்தும் அவரை நீக்குவதற்குப் கட்சியின் தலைமைத்துவம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “சரித் அபேசிங்க கடந்த 2023-ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவோ அல்லது தொகுதி அமைப்பாளராகவோ இருக்கவில்லை; அக்காலகட்டத்தில் அவர் கட்சியின் எந்தவொரு உத்தியோகபூர்வ பதவிகளையும் வகிக்கவில்லை.” மேலும், ஊழல், லஞ்ச ஊழல் அல்லது ஏனைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும், நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் எதிர்ப்பைத் தெரிவிக்காது என்றும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு காரணமாகச் சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் நீதிமன்ற விசாரணைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.

