நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் ஐ.நா. சபை விடுத்த அறிக்கையில் 'உயர்நீதிமன்றம்' என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது; ஏனைய நீதிமன்றங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, அங்கும் தவறான விடயங்களே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, ஐ.நா. சபை வெளியிட்ட அறிக…

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் ஐ.நா. சபை விடுத்த அறிக்கையில் 'உயர்நீதிமன்றம்' என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது; ஏனைய நீதிமன்றங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, அங்கும் தவறான விடயங்களே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அரசாங்கம் என்ற அடிப்படையில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(18) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்,

"நீத்துறை திருத்தச் சட்டமூலத்தில் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 120 ஆக அதிகரிக்கவும், நீதிபதிகளின் பதவிக்காலத்தை 63 வயதாக அதிகரிக்கவும் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை 67 வயதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை 65 வயதாகவும் அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 24 ஆக அதிகரிக்கவும் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இந்தத் திருத்தங்களுக்குத்தான் தற்போது எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் ஐ.நா. சபை விடுத்த அறிக்கையில் 'உயர்நீதிமன்றம்' என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது; ஏனைய நீதிமன்றங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, அங்கும் தவறான விடயங்களே குறிப்பிடப்பட்டுள்ளன.

எனவே, ஐ.நா. சபை அனுப்பிய அறிக்கை தொடர்பில் அரசாங்கம் என்ற அடிப்படையில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச ஆகியோர் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அனைவரையும் பதவிநீக்கினார்கள். ஆகவே, நீதித்துறை சுதந்திரம் பற்றி இன்று குரல் கொடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

ராஜபக்சக்கள் உட்பட திருடர்களுக்கு எதிரான வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுகின்றன; பலர் சிறையில் உள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர் இந்தத் திருடர்களுக்காகவே குரல் கொடுக்கிறார்; அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். அரசாங்கத்தை எவ்வழியிலாவது விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அனைத்துப் பக்கமும் செல்கிறார்.

அரசாங்கத்தின் முறைமை மாற்றம் சரி, ஆனால் ரணில் விக்கிரமசிங்கவைக் கைதுசெய்தது தவறு என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள். யார் இந்த ரணில்? இந்த நாட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு மறைமுகமாக அவர் பொறுப்புக்கூற வேண்டும்" என்றார்.