அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப் "பெரும் பின்னடைவு" என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் துர்க் எச்சரித்துள்ளார். மீண்டும் தொடங்கியுள…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப் "பெரும் பின்னடைவு" என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் துர்க் எச்சரித்துள்ளார். மீண்டும் தொடங்கியுள்ள இந்த நேரடி மோதலானது, இப்பிராந்தியத்தில் அமைதி முயற்சிகளைச் சீர்குலைப்பதுடன், நிலைத்தன்மையற்ற சூழலை மேலும் ஆழமாக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் மனித உரிமைகளுக்குக் கடுமையான ஆபத்துகள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணையிலும் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் ராணுவ மோதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக வெளியாகும் செய்திகள் "மிகவும் கவலையளிக்கின்றன" என துர்க் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் தாக்கம் இப்பிராந்தியத்தையும் கடந்து உலகளவில் எதிரொலிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். இந்த முக்கிய நீர்வழிப் பாதை மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான இன்றியமையாத உயிர்நாடியாகும் எனவும் இதில் ஏற்படும் தடங்கல்கள் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.இது பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியாகவும் மிகக் கடுமையான சமூக-பொருளாதார மற்றும் மனிதாபிமானப் பேரழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். தற்போதைய இக்கட்டான சூழலில், இரு தரப்பும் உடனடியாக ராஜதந்திர பேச்சுவார்த்தை, பொறுமை மற்றும் பதற்றத்தைக் தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இரு நாடுகளும் உடனடியாகப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

