அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை அரச பயங்கரவாதம் என ஈரான் கண்டித்துள்ளது. சர்வதேச சட்டப்படி பிற நாடுகள் இந்தத் தடைகளை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளது. அதேவேளையில், ஈரானைக் குறிவைத்து மேலும் பல பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது. ஆ…
அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை அரச பயங்கரவாதம் என ஈரான் கண்டித்துள்ளது. சர்வதேச சட்டப்படி பிற நாடுகள் இந்தத் தடைகளை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளது. அதேவேளையில், ஈரானைக் குறிவைத்து மேலும் பல பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு போர் தொடங்குவதற்கு முன், உலகின் 20% கச்சா எண்ணெய் விநியோகத்தைக் கையாண்ட ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க மத்தியஸ்தர்கள் தீவிர முயற்சி எடுத்து வரும் சூழலில் ஈரானின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஈரானுடன் வர்த்தக உறவுகளைத் துண்டிக்குமாறு பிற நாடுகளுக்குக் கெடு விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், தவறினால் கடுமையான தடைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தது. இது குறித்து ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சட்டவிரோதக் கட்டுப்பாடுகளை மற்ற நாடுகள் ஏற்று நடப்பது, ஒரு நாட்டின் சட்டவிரோத விருப்பத்திற்குத் துணை போவதற்குச் சமம் என தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் "மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்" ஆகும் என தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்த பிற நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் முன்வர வேண்டும் என ஈரான் கோரியுள்ளது. ஈரானுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கும் எகிப்தின் 'பேங்க் மிஸ்ர்' வங்கி, ஈரானுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்ததால் அதன் அமெரிக்க நிதி அணுகலை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, ஹாங்க்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மற்றும் ஈரானின் 'பேங்க் மெல்லி' வங்கியுடன் தொடர்புடைய ஒரு நபர் மீதும் அமெரிக்க திறைசேரி புதிய தடைகளை விதித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வரக் கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தூதரக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி வியாழக்கிழமை டெஹ்ரானில் ஈரானிய தலைவர்களைச் சந்தித்து, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.












