தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்ற…
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துச் சேவைகளும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான பேருந்துகளுக்கு எதிராக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.பரிசோதனை நடவடிக்கைகள்
இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதில் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் 10 பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோத பேருந்துச் சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் இது அநீதியை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயக்குவதற்கு ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.விசேட நடவடிக்கை இந்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து பேருந்துகளை பரிசோதிக்கவுள்ளனர்.
இதன்போது, வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும்.
அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே பேருந்துச் சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது என்றும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.












