செ.தி.பெருமாள் பெருந்தோட்ட மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்று கோதுமை மாவிலிருந்து செய்யப்படும் ரொட்டியாகும். நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவால் ஏற்கனவே நசுங்கிப் போயிருக்கும் சாதாரண மக்களின் வயிற்றில், மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்திருக்கிறது இ…
செ.தி.பெருமாள்
பெருந்தோட்ட மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்று கோதுமை மாவிலிருந்து செய்யப்படும் ரொட்டியாகும். நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவால் ஏற்கனவே நசுங்கிப் போயிருக்கும் சாதாரண மக்களின் வயிற்றில், மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்திருக்கிறது இந்த விலைவாசி உயர்வு. கோதுமை மாவு கிலோவுக்கு 17 ரூபாவால் திடீரென அதிகரிக்கப்பட்டதை அடுத்து, சாதாரண பாமர மக்கள் பசியாறும் உணவான ரொட்டி, பரோட்டா மற்றும் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வெறும் ஐந்து ரூபாய் தானே என்று ஆட்சியாளர்கள் அலட்சியமாக நினைக்கலாம். ஆனால், அன்றாடம் கூலிவேலை செய்து, சிறு உணவகங்களில் சாப்பிட்டு உயிர்வாழும் ஏழை எளிய மக்களின் கழுத்தை நெரிக்கும் கொடிய பேரிடியாகவே இந்த விலையேற்றம் அமைந்துள்ளது.
மக்களுக்குப் பெரியதொரு விடிவைத் தருவோம், விலைகளைக் குறைப்போம், சகல வளங்களையும் தருவோம் என்றெல்லாம் பல வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு ஆட்சிக்கு வந்த அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், இன்று ஏழை மக்களை நடுத்தெருவில் அநாதைகளாக நிறுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி உயர்வால் மக்கள் படும் கடுமையான அவலங்களை இந்த அரசாங்கம் எந்தவித சலனமுமின்றி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. சாதாரண மக்களின் அன்றாட உணவுப் பொருட்களின் விலையைக் கூட கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாத இந்த ஆட்சியின் கையாலாகாத்தனத்தால், இன்று ஒவ்வொரு குடிமகனும் தமது குடும்பத்தின் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த அவல நிலையில், அநுர அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கூறும் நியாயங்கள் பசியால் வாடும் மக்களை மேலும் ஆத்திரமூட்டுவதாகவே அமைந்துள்ளன. “கடந்த கால அரசுகள் நாட்டை அழித்துவிட்டன; கஜானா காலியாக உள்ளது; ஒரே இரவில் அநுரவிடம் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறி, தமது அரசின் தோல்ிக்கு அவர்கள் வெட்கமின்றி வக்காலத்து வாங்குகிறார்கள். தேர்தல் மேடைகளில் வாக்குக் கேட்கும் போது மக்களிடம் காட்டாத இந்தத் “கஜானா கதைகளை” இப்போது காட்டித் தப்பிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்?
மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அதிகார நாற்காலியில் சுகமாக அமர்ந்த பிறகு, பழைய ஆட்சியாளர்களைக் குறை கூறிக்கொண்டு காலத்தைக் கடத்துவது அநுர அரசின் முழுமையான தோல்வியையும் ஏமாற்று வித்தையையுமே அப்பட்டமாகக் காட்டுகிறது. பசியோடு அழும் ஒரு குழந்தைக்கு “கஜானா காலியாக இருக்கிறது” என்ற தத்துவத்தை ஊட்டிப் பசியாற்ற முடியுமா என்பதை இந்த அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு சாதாரண கடைக்குச் சென்று ஒரு ரொட்டியை வாங்கும் போது, கடைக்காரர் நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்பதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களுக்கும் சரி, வேறு கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கும் சரி, பசியும் வலியும் ஒன்றுதான். விலையேற்றத்தின் கொடூரமான சுமை அனைவரின் தலைமீதும் கல்லைப் போல சமமாகவே விழுந்துள்ளது. ஒரு ரொட்டிக்கு ஐந்து ரூபாய் அதிகரிப்பு என்பது, ஒரு நாளுக்குப் பலமுறை உணவு வாங்கும் ஒரு ஏழைக் குடும்பத்தின் மாதாந்த வரவு செலவில் எவ்வளவு பெரிய இடியை இறக்கும் என்பதை இந்த அரசாங்கம் கொஞ்சமும் கருத்தில் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த மக்களும் இந்தத் தொடர் விலையேற்றங்களாலும், தாங்க முடியாத சுமையாலும் நாளுக்கு நாள் மூச்சுத் திணறிச் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டை ஒரே நாளில் முழுமையாகக் கட்டியெழுப்ப முடியாது என்பது யதார்த்தமாக இருக்கலாம். அதற்காக, “நாங்கள் நாட்டைத் திருத்தும் வரை உங்கள் வயிற்றுப் பசியைப் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்று மக்களிடம் சொல்வதற்கு எந்தவொரு அரசாங்கத்துக்கும் தார்மீக உரிமை இல்லை. சமூக வலைத்தளங்களில் அரசியல் விவாதங்களை வெல்வதையும், வீண் கதைகளை அளப்பதையும் விட, சாதாரண மக்களின் பசியைப் போக்குவதே ஒரு அரசாங்கத்தின் முதல் கடமையாகும்.
சாமானிய மக்களின் அன்றாட உணவான ரொட்டியின் விலையைக் கூட கட்டுப்படுத்த முடியாத அநுர அரசின் இந்த நிர்வாகச் சீர்கேடு, மக்கள் மத்தியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பசியால் துடிக்கும் மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை ஆட்சியாளர்கள் வெகுவிரைவில் உணர்ந்துகொள்ளும் காலம் நெருங்கிவிட்டது.












