முருகானந்தம் தவம் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு தேர்தல் காலமும் சிறுபான்மையின, குறிப்பாகத் தமிழ் மக்களுக்குப் புதிய நம்பிக்கைகளையும் வாக்குறுதிகளையும் சுமந்தே வருகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுரகுமார திசாநாயக்க வடக்கு - கிழக்குத் தமி…

முருகானந்தம் தவம்

இலங்கை அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு தேர்தல் காலமும் சிறுபான்மையின, குறிப்பாகத் தமிழ் மக்களுக்குப் புதிய நம்பிக்கைகளையும் வாக்குறுதிகளையும் சுமந்தே வருகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுரகுமார திசாநாயக்க வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகவும், அவர்களது உரிமைகளை உறுதி செய்வதாகவும் பல முக்கிய வாக்குறுதிகளை வழங்கினார். தேர்தல் மேடைகளில் அவர் எழுப்பிய உரத்த குரலும், ஊழலுக்கு எதிரான சாட்டையடிகளும், சிறுபான்மையின மக்களின் உரிமைகள் குறித்து அவர் முன்வைத்த முற்போக்குக் கருத்துகளும் ஒட்டுமொத்தச் சிறுபான்மையின மக்களிடமும் ஒரு புதிய எதிர்பார்ப்பை விதைத்தன.

ஆனால், அரியணை ஏறியதற்குப் பிறகு ஜனாதிபதி அநுரகுமாரவின் அதே குரலில் ஒலிக்கும் தயக்கமும், கொள்கை நிலைப்பாடுகளில் காணப்படும் பின்வாங்கல்களும், "அதிகாரத்திற்கு முந்தைய அநுர வேறு; ஜனாதிபதியான பின்னரான அநுர வேறா?" என்ற கேள்வியைத் தமிழ் மக்கள் மத்தியில் எதிரொலிக்கச் செய்துள்ளன. எதிர்க்கட்சியில் இருந்தபோது சாடிய அமைப்புகளுடனும் எதிர்த்த கொள்கைகளுடனுமே இன்று சமரசம் செய்துகொள்ளும் இந்த அரசியல் முரண், வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கைத் துரோகமாக உருவெடுத்து வருகிறதா என்பதே தமிழ் மக்களிடத்தில் இன்றுள்ள கேள்வியாகும்.

காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் முறையான அதிகாரப் பகிர்வு எனப் பல்வேறு தளங்களில் அளிக்கப்பட்ட இவ்வாக்குறுதிகள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன. இருப்பினும், ஆட்சிப் பீடமேறியதன் பின்னர் அவ்வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாமல் காலதாமதப்படுத்தப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு பெரும் ஏமாற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறு இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய ஆறு தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் கூட்டின் பிரதிநிதிகளும் அண்மையில் அவரைச் சந்தித்துத் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர். அப்போது அவர் வெளிப்படுத்திய கருத்துகள், காட்டிய அக்கறையின்மை, வழங்காத உறுதிமொழிகள், தட்டிக்கழிப்புகள் என்பவற்றின் தொடர்ச்சியாக அவரது அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளிப்படுத்திய கருத்துகளும் ஜனாதிபதி மீதான இந்த நம்பிக்கையிழப்பை அதிகரித்துள்ளன.

இச்சந்திப்பில் விசேடமாகப் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி விரிவாகப் பேசப்பட்டது. தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைவாகப் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமை மற்றும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாமை என்பன தொடர்பில் தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் அதிருப்தி வெளியிட்டனர். அதேபோன்று, நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு வலியுறுத்திய தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள், தற்போது பழைய முறையில் தேர்தலை நடத்துமாறும், அதன் பின்னர் அடுத்த பதவிக்காலம் வரையுள்ள இடைவெளியில் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் தீர்மானமொன்றுக்கு வர முடியும் என்றும் எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, வடக்கு - கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் மற்றும் மலையக மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாகக் கருத்துகளை முன்வைத்தனர்.

ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரப் பகிர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு மாற்றம் குறித்து உடனடித் தீர்வைக் கொடுக்காமல், "தேசிய இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும்" என்ற பெயரில் கால அவகாசம் கோரிப் பிரச்சினையைத் காலவரையறையின்றித் தள்ளிப்போடும் வழக்கமான உத்தியையே கையாண்டுள்ளார். தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வின் முதன்மை அடையாளமான மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்தக் கோரியபோது, பாராளுமன்றத் தெரிவுக் குழுவைச் சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு இழுத்தடிப்பு அரசியலை மேற்கொண்டார். வடக்கு - கிழக்கில் தொடரும் தொல்லியல், வனவளத் திணைக்களங்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ வசமுள்ள காணி விடுவிப்பு போன்ற உடனடித் கவனத்திற்குரிய பிரச்சினைகளுக்குத் தெளிவான, நடைமுறை சாத்தியமான தீர்வையோ காலக்கெடுவையோ ஜனாதிபதி வழங்கவில்லை.

மலையக மக்களின் காணி உரிமை குறித்துப் பேசப்பட்டபோது, பெருந்தோட்டக் குத்தகை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படும் 2042ஆம் ஆண்டிற்குள் தீர்வு காணப்படும் எனக் கூறி, அவர்களின் தற்போதைய அவசர வாழ்வாதாரக் கோரிக்கைகளை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு அப்பால் தள்ளிப் போட்டுள்ளார். தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்த கட்டமைப்பு ரீதியான கோரிக்கைகளை ஏற்காமல், வழக்கமான அபிவிருத்தி மற்றும் பொருளாதார உதவிகள் மூலமே சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்ற வழக்கமான தட்டிக்கழிப்பையே ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் கையாண்டுள்ளார்.

ஜனாதிபதிதான் இந்தச் சந்திப்பில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளில் நழுவல் போக்கைக் கையாண்டார் என்றால், அவரின் அமைச்சர்கள் அதனையும் தாண்டி ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே முடியாதென்ற வகையில் உறுதியாகச் சில தீர்மானங்களை அறிவித்துவிட்டனர். அதிலும் நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்திலேயே இவ்வாறான அறிவிப்புகளை அவர்கள் விடுத்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் 27/2 இல் பாராளுமன்றத்தில் எழுப்பிய, இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பான கேள்விகளுக்குப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பதிலளித்தார். அப்போது, வடக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குள் இராணுவத்தினால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் காணிகள் அப்பகுதிகளின் பாதுகாப்புக்கும் மூலோபாய முக்கியத்துவத்திற்கும் அவசியமானவை என்பதால் அவற்றை விடுவிக்க முடியாது என்றும், பலாலி சர்வதேச விமான நிலையத்தைக் கொண்டுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இலங்கை விமானப் படையினரால் பயன்படுத்தப்படும் 774.98 ஏக்கர் காணிகளையும் விடுவிக்க முடியாது என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

அதே தினம், பாராளுமன்றத்தில் இரா. சாணக்கியன் எழுப்பிய, இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கம் கொண்ட கிவுல் ஓயா திட்டம் மற்றும் கிழக்கு மாகாண மக்களின் மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைகளுக்குக் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த பதிலளித்தார். கிவுல் ஓயா திட்டம் எக்காரணம் கொண்டும் இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார். அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை என்ற ஒரு இடமே இல்லை என்று அவர் வெளியிட்ட அறிவிப்புத் தமிழ் தரப்புகளுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தது.

அதுமட்டுமன்றி, இலங்கையின் எந்தவொரு சிறைச்சாலைகளிலும் தமிழ் அரசியல் கைதிகள் என்ற எவருமே கிடையாது; குற்றவாளிகளும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களும் மட்டுமே உள்ளனர் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் அறிவிப்பும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்ற கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவே இருந்தது.

ஜனாதிபதியினதும் அவரின் அமைச்சர்களினதும் இவ்வாறான தட்டிக்கழிப்புகள் மற்றும் அறிவிப்புகள் மூலம், அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருந்த தமிழ் சமூகத்திற்கு வாக்குறுதிகளைக் காற்றோடு காற்றாகப் பறக்கவிடும் அணுகுமுறையே மீண்டும் பதிலாக்கப்பட்டுள்ளது. வரலாறு முழுவதும் ஆட்சியாளர்களின் பெயர்களும் முகங்களும் மாறியிருக்கலாமே தவிர, தமிழ் மக்களின் மீதான அணுகுமுறையும் ஏமாற்றங்களின் பின்னணியும் மாறவே இல்லை என்பதைத் தற்போதைய சூழல் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளும், நில ஆக்கிரமிப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை சார்ந்த நியாயமான கோரிக்கைகளும் அலட்சியப்படுத்தப்படும் வரை, எந்தவொரு அரசாங்கமும் தன்னைத் 'தேசிய அரசாங்கம்' என்று கூறிக்கொள்ள முடியாத நிலையே தற்போதைய அநுரகுமார அரசாங்கத்திலும் தொடர்கிறது.