அரச ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய இந்த ஆ…
அரச ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது. இது தொடர்பான அறிவித்தல் 2026 ஜூன் 22 ஆம் திகதியிட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.ஆணைக்குழு ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் தலைவராகவும், நாலக திசாநாயக்க செயலாளராகவும் செயல்படும் இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர். அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரசு ஊழியர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீரமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இருபது ஆண்டுகளுக்குப் பிறகே ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுவதாகவும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார்.ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதில் அரச அதிகாரிகளுக்குப் பெரும் பங்கு உள்ளதால், அரசு சேவையைப் பலப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு அரச சேவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நீண்ட காலமாக ஆராயப்பட்டு வந்த போதிலும், அதற்கான விஞ்ஞான பூர்வமான வேலைத்திட்டம் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரச சேவையின் ஒரு துறையிலுள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை மட்டும் ஆராய்ந்து தீர்க்க முயன்றால், அது மற்றொரு துறையிலுள்ள ஊழியர்களின் உரிமைகளைப் பாதிக்கும் என்ற அனுபவம் உள்ளது என்றும்அத்தகைய பிரச்சினைகளைத் தீர்த்து முழு அரச சேவைக்கும் பொருந்தக்கூடிய விஞ்ஞான பூர்வமான வேலைத்திட்டத்தை முன்வைப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.












