(நா.தனுஜா) அரசாங்கத்தினால் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய சூழலியல் (திருத்தச்) சட்டத்துக்கு அதற்கு முன்பதாகவே மாகாணசபைகளின் ஒப்புதல் பெறப்பட்டிருக்கவேண்டும். அதனூடாகவே சாதாரண பெரும்பான்மையுடன் அச்சட்டத்தை நிறைவேற்றமுடியும். இருப்பினும் தற்போது மாகாணசபைகள் இயங…
(நா.தனுஜா) அரசாங்கத்தினால் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய சூழலியல் (திருத்தச்) சட்டத்துக்கு அதற்கு முன்பதாகவே மாகாணசபைகளின் ஒப்புதல் பெறப்பட்டிருக்கவேண்டும். அதனூடாகவே சாதாரண பெரும்பான்மையுடன் அச்சட்டத்தை நிறைவேற்றமுடியும். இருப்பினும் தற்போது மாகாணசபைகள் இயங்குநிலையில் இல்லாத காரணத்தினால், அவற்றால் ஒப்புதல் வழங்கமுடியாத நிலையில், இச்சட்டத்தை அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியிருக்கவேண்டும். ஆனால் அதற்குப் புறம்பாக சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றியமை முற்றிலும் தவறாகும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபைக்கான அதிகாரங்களைக் குறைப்பதுடன் மாகாணசபை அதிகாரங்களுடன் முரண்படும் விதத்தில் அமைந்திருப்பதாக குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த் தேசிய சூழலியல் (திருத்தச்) சட்டமூலம் கடந்த புதன்கிழமை (24) பாராளுமன்றத்தில் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் அமைந்திருக்கும் தேசிய சூழலியல் (திருத்தச்) சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு இவ்வாறான விடயங்களில் வழமையாக அக்கறையுடன் செயற்பட்டுவரும் அமைப்புக்கள் தவறிவிட்டன. எனவே இவ்வாறு குறித்த சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படாவிடின், சட்டமூலம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சட்டமா அதிபர் சபாநாயகருக்கு வழங்கவேண்டும். அவ்வாறு சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையில், இந்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல எனும் போதிலும், இதில் உள்ள விடயங்கள் மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரங்களுடன் தொடர்புபட்டிருப்பதனால் அதற்கு மாகாணசபைகளின் அனுமதியைப் பெறவேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அவ்வாறு அனுமதி பெறப்படும் பட்சத்தில் இச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றமுடியும் என்றும், இல்லாவிடின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனேயே நிறைவேற்றவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. எனவே வழமையாக இவ்வாறான சட்டங்கள் கொண்டுவரப்படும்போது எந்தெந்த மாகாணசபைகள் அச்சட்டத்தை ஏற்றுக்கொள்கின்றனவோ, அவற்றுக்கு மாத்திரமே அச்சட்டம் செல்லுபடியாகும். இருப்பினும் தற்போது மாகாணசபைகள் இயங்குநிலையில் இல்லாத காரணத்தினால், அவற்றால் இச்சட்டமூலத்துக்கு ஒப்புதல் வழங்கமுடியாது. எனவே அரசாங்கம் பாராளுமன்றத்தில் இதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியிருக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் ஏதோவொரு நீதிமன்றத்தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு, இச்சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றியிருக்கிறது. அது முற்றிலும் தவறானதாகும் என்றார்.

