இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் காணி உரிமை தொடர்பில் அரசு பேசிப் பேசியே காலத்தைக் கடத்துவதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். புதிய "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை" (Central Highlands Protection Authority) என்ற புதிய சபையைக் கொ…

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் காணி உரிமை தொடர்பில் அரசு பேசிப் பேசியே காலத்தைக் கடத்துவதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை" (Central Highlands Protection Authority) என்ற புதிய சபையைக் கொண்டுவந்து, "காலநிலை, மண் சரிவு, நீர்பிடிப்பு" போன்ற சொற்களைச் சந்தைப்படுத்தி, ஒட்டுமொத்தப் பெருந்தோட்ட வாழ் மலையகத் தமிழர்களுக்கும் காணி உரிமையைத் தந்திரமாக மறுக்கவும், அவர்களை வேறு இடங்களில் குடியேற்றவும், தொடர்மாடிக் கட்டடங்களைக் கட்டிக்குடியேற்றவும் தற்போதைய அரசாங்கம் திட்டமிடுவதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து இலங்கையில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தேசப் பணிப்பாளர் ஷனென் கோவ்லின் தலைமையிலான குழுவினரைச் சந்தித்துத் தெளிவுபடுத்தியதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், மனோ கணேசனுடன் தமுகூ அரசியல் குழு உறுப்பினர்களான பேராசிரியர் விஜயசந்திரன், சட்டத்தரணி பாரத் அருள்சாமி, பொறியியலாளர் பிரஜீவன் ஆகியோரும், ஏடிபி சார்பில் பணிப்பாளர் ஷனென் கோவ்லின், தேசச் செயற்பாட்டுத் தலைவர் சொல்பொன் மம்பேடோவா உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினரும் கலந்துகொண்டனர்.

அங்கு ஏடிபி குழுவினரிடம் மனோ கணேசன் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில், மலையக மக்கள் வளர்ச்சி குன்றிய பிரிவினராவர். இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள்ளன. எமது மக்களுக்கு 2003 ஆம் ஆண்டுதான் இறுதிக் தொகுதி குடியுரிமை கிடைத்தது. ஆகவே, எமது ஆரம்பப் புள்ளி தாமதமானது போலவே வளர்ச்சியும் தாமதமானது. எமது குடியுரிமை முழுமையடைய வேண்டுமானால், எமது காணிக்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணி உரிமை இல்லாவிட்டால் எமது குடியுரிமை முழுமையடையாது; அது கிடைத்தால் ஏனைய உரிமைகள் படிப்படியாக வந்து சேரும். அரசாங்கம் "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை" என்ற புதிய யோசனையை முன்வைத்து, சட்டபூர்வமாக அதை உருவாக்க முனைகிறது. இதன் மூலம் மலைநாட்டு காலநிலை, மண் சரிவு, நீர்பிடிப்பு ஆகியவற்றுக்காக இதைச் செய்வதாகவும், அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி செய்யப் போவதாகவும் கூறுகிறது. மலைநாட்டின் நீர்வளங்கள், காடுகள், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் சூழலியல் அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்விட உரிமையும் காணி உரிமையும் பறிக்கப்படக்கூடாது. மலையக மக்கள் பாரம்பரியமாகச் சில பெருந்தோட்ட மாவட்டங்களில் மட்டுமே வாழ்கின்றனர் என்ற தவறான அணுகுமுறையையும் அரசு கவனத்தில் கொள்ளவில்லை. உண்மையில், மலையக மக்கள் நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களுடன் இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, மொனராகலை, கொழும்பு/அவிசாவளை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட கீழ்நாட்டு மாவட்டங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கக் கட்சியான ஜே.வி.பி., மலையக மக்களின் காணி உரிமைக்கான கோரிக்கையைச் சித்தாந்த ரீதியாகப் பாரம்பரியமாக நிராகரித்து வந்ததுடன், அதற்குப் பதிலாகப் பெருந்தோட்டக் காணிகளை மீளக் காடாக்கும் (reforestation) கருத்தை முன்னிறுத்தி வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் பின்னணி இதுவா என்ற பலத்த சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் சில மலை உச்சிப் பகுதிகளும் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் கொண்ட பகுதிகளும் உயர் மலைநாடு (Highlands) என அடையாளப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டியிருக்கலாம். ஆனால், முழுப் பெருந்தோட்டப் பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட காணிகளாகக் கருதுவது மலையக மக்களின் நியாயமான காணி உரிமையை மறுக்கும் நிலைக்குக் கொண்டு செல்லக்கூடும். எமது தலையீடுகளின் விளைவாக, பெருந்தோட்டங்களில் வீடமைப்பதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்குவதற்கு இணங்கியுள்ளதுடன், நிதியும் தயாராக உள்ளது. ஆனால், காணி வழங்கப்படவில்லை. பெருந்தோட்ட நிறுவனங்களால் காணி விடுவிக்கப்படாததற்கு அடிப்படையான காரணம், மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாக அரசாங்கத்திடம் இன்னமும் தெளிவான கொள்கை இல்லாததே ஆகும். கீழ்நாட்டுப் பெருந்தோட்டங்களில் வாழும் மலையகக் குடும்பங்களுக்கு வீடமைப்பிற்கான காணித் துண்டுகளை உடனடியாக ஒதுக்குமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம். நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களின் மலை உச்சிப் பகுதிகளைத் தவிர்த்து, நெடுஞ்சாலைகளுக்கு அருகாமையில் பாதுகாப்பான இடங்களில் வீடமைப்பிற்கான காணிகளை வழங்குமாறு கோருகிறோம். பாதுகாப்பான குடியிருப்புகள் குறித்துப் பேசும் அரசு, மலைகளில் தொடர்மாடிகளைக் கட்டி எமது மக்களை அங்கே குடியமர்த்தப் போடும் திட்டங்களையும் நாம் நிராகரிக்கிறோம். சிறுபான்மைச் சமூகத்தின் காணி உரிமை மற்றும் வாழ்விட உரிமையை உதாசீனம் செய்யும் எந்தவொரு முயற்சிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி துணை போய்விடக் கூடாது. உங்களது நல்லெண்ண உதவிகள் முறையற்ற முறையில் பயன்படுத்தப்பட இடமளிக்கக் கூடாது.

இது பற்றித் தெளிவுபடுத்துவதற்காகத் தமது குழுவினருடன் இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியையும், ஏனைய சர்வதேசப் பிரதிநிதிகளையும் மீண்டும் சந்திக்க உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எமது முன்வைப்புகளைச் செவிமடுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தேசப் பணிப்பாளர் ஷனென் கோவ்லின் தலைமையிலான குழுவினர், இந்த முக்கிய விவகாரங்களைத் தம்மைக் கவனத்திற்குக் கொண்டுவந்தமைக்காகத் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு நன்றி தெரிவித்தனர். சிறுபான்மை மக்களின் காணி மற்றும் கலாச்சார உரிமைகளை மறுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தமது நிறுவனம் ஒருபோதும் துணைபோகாது என்றும், இவற்றைத் தாம் அரசுடன் முன்னெடுக்கும் திட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்துவதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர்.