முந்தைய காலங்களில் முக்கிய ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி, பிரதேச செய்தியாளர்கள் வரை அரசியல்வாதிகளினால் பராமரிக்கப்பட்டதாக வெகுசன ஊடகத்துறை பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகத்துறை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் ப…

முந்தைய காலங்களில் முக்கிய ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி, பிரதேச செய்தியாளர்கள் வரை அரசியல்வாதிகளினால் பராமரிக்கப்பட்டதாக வெகுசன ஊடகத்துறை பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகத்துறை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகளால் பராமரிக்கப்படும் ஊடகவியலாளர்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலம் முழுவதும், கணிசமான எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள் அரசாங்கங்களால் பராமரிக்கப்பட்டு, சலுகைகளும் நன்மைகளும் வழங்கப்பட்டன. சில உள்ளூர் பத்திரிகையாளர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் நாங்கள் தனிப்பட்ட வரப்பிரசாதங்களை வழங்கி, பத்திரிகையாளர்களை எந்த வகையிலும் பராமரிப்பதில்லை. ஆனாலும், நாங்கள் பத்திரிகையாளர்களுடன் மிகவும் நெருங்கிய உறவைப் பேணி வருகிறோம். இந்தச் சூழலில், பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நாங்கள் நீடித்த தீர்வுகளை வழங்க முயற்சிக்கிறோம். நாங்கள் ஊடகங்களை எதிரியாகக் கருதுவதில்லை.

ஊடக நெறிமுறைகள் அதேபோன்று ஊடகங்களுக்கு அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை உண்டு. எனினும் அவ்வாறான விமர்சனங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் செய்யப்பட வேண்டும். ஊடக நெறிமுறைகளில் அக்கறை கொள்ள வேண்டும் என்றும் ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைக்கும் சில ஊடக நிறுவனங்கள் உள்ளன.

அந்த நிறுவனங்களுக்குக் கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நீங்கள் அனைவரும் நாட்டின் பொதுச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள். நீங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு, நெறிமுறைகளை மீறிச் செயல்பட்டால், மக்கள் உங்களை மிக விரைவாக நிராகரித்து விடுவார்கள் என்பது தான்.

நாங்கள் என்றைக்கும் ஊடகங்களை எங்கள் எதிரியாகக் கருதுவதில்லை. ஜனநாயகத்தின் ஒரு இன்றியமையாத சக்தியாகவே கருதுகிறோம் என்றார்.