துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கங்கொடவில பகுதியில் வைத்து குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் நேற்று (01) பி…

துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கங்கொடவில பகுதியில் வைத்து குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் நேற்று (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கங்கொடவில, நுகேகொட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவராவார்.கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலவியாகந்த வீதிப் பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலத்த காயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு இச்சந்தேகநபர் உதவி புரிந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய, குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று சந்தேகநபரின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் இக்குற்றச்செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த போலி இலக்கத் தகடுகள், கடந்த ஜூலை 19ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள மயானத்தில் வைத்து நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கும், ஜூலை 21ஆம் திகதி கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் விகாரை வீதியில் உள்ள வீடொன்றிற்குச் சென்று துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தித் தாக்கிய சம்பவத்திற்கும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருந்தவை என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.