உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்த நிலையில், தாக்குதல் தொடர்பான பொறுப்புக்களில் இருந்து அவர் எப்படி விலக முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ர…
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்த நிலையில், தாக்குதல் தொடர்பான பொறுப்புக்களில் இருந்து அவர் எப்படி விலக முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.வழக்குத் தொடர பரிந்துரை2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விஜித மலல்கொட அறிக்கைக்கு அமைவாகவே இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
எனினும், அந்த அறிக்கையில் 14 பேருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
மேலும், 2019ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று, 2022இல் நிறைவடைந்தது. அந்த வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்தனர்.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் முடிவுற்றப் போது, பூஜித் மற்றும் மைத்திரி ஆகிய இருவருக்கு நட்டஈடு செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அப்போது உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இருவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் இணைக்கவில்லை.
இதன்படி சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே தனது கடமையை மீறியுள்ளது. தண்டனை வழங்கப்பட வேண்டிய இருவரை சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்துள்ளது.அவ்வாறு எப்படி நடக்க முடியும்.
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் நிலந்த ஜயவர்தன மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
தாக்குதல் சம்பவம் நடக்கும் போது பாதுகாப்பு அமைச்சு, முப்படைகளும் மைத்திரிபால சிறிசேனவிடமே இருந்தது. அவர் எப்படி பொறுப்பில் இருந்து விலக முடியும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும். அந்த விசாரணைகள் நடக்கும் போதே 2022இல் தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் எப்படி விடுவிக்கப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களம் தெளிவாக தனது கடமைகளை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.












