(எம்.மனோசித்ரா) ஐக்கிய மக்கள் சக்தியால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் எமது கட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பொய் கூறி எமது கட்சி மீது அவதூறு பரப்புவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தத் தவறான குற்றச்சாட்டுக்களுக…

(எம்.மனோசித்ரா) ஐக்கிய மக்கள் சக்தியால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் எமது கட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பொய் கூறி எமது கட்சி மீது அவதூறு பரப்புவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தத் தவறான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா அமைப்பாளர் வருண ராஜபக்ஷ அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பில், இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சரித் அபேசிங்க என்பவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தொலைபேசி மூலம் அழைத்து, ஜனாதிபதியைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்று முற்றிலும் பொய்யானதாகும். பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்புகள் மற்றும் இலஞ்ச ஊழல் விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள இந்தச் சூழ்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி எந்தளவுக்கு பதற்றமடைந்துள்ளது மற்றும் அரசியல் ரீதியாக வங்குரோத்தடைந்துள்ள என்பதையே இந்த அபாண்டமான குற்றச்சாட்டு காட்டுகிறது. அத்துடன், இவ்வாறான அப்பட்டமான பொய்களைக் கூற வைக்குமளவுக்கு அக்கட்சி கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வருந்தத்தக்கதாகும். ஏனைய கட்சிகளுக்கு தங்களின் வெவ்வேறு அரசியல் தேவைகளுக்காக, நபர்களின் பின்னணியை ஆராயாமல் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கலாம். ஆனால், குற்றவாளிகளை எமது கட்சியிலோ அல்லது அரசாங்கத்திலோ இணைத்துக்கொள்ள வேண்டிய எந்தவொரு தேவையும் ஜே.வி.பிக்கு கிடையாது. இவ்வாறான தவறான பிரச்சாரங்கள் மூலம், குற்றச் செயல்களுக்குக் கிடைக்க வேண்டிய சமூகத்தின் அவதானத்தை திசைதிருப்பவும், குற்றவாளிகளைக் காப்பாற்றவும் சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள் வீணானவையாகும். எனவே, பொய் கூறி எமது கட்சி மீது அவதூறு பரப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் மேற்கொள்ளும் இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தத் தவறான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதையும் ஜே.வி.பி உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது என்றுள்ளது.