பூ. லிண்டன் பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமைத்தீவுப் பகுதியில், இரவு வேளையில் வாகனங்களில் வந்தவர்களால் ரகசியமாகக் கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்றுகூடியதால் கோபுரம் அமைக்கும் முயற்சி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. குறித…
பூ. லிண்டன்
பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமைத்தீவுப் பகுதியில், இரவு வேளையில் வாகனங்களில் வந்தவர்களால் ரகசியமாகக் கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்றுகூடியதால் கோபுரம் அமைக்கும் முயற்சி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தகவல் தருகையில், “கிராஞ்சி, பொன்னாவெளியை ஊடறுத்து சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலைத் திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அப்பகுதி மக்களின் பாரிய எதிர்ப்பை மீறி, குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 34 காற்றாலைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்றுவருகின்றன.
இதன் பின்னணியில், இரவு வேளையில் வாகனத்தில் வந்த பெரும்பான்மை இன மொழியைப் பேசும் நபர்கள் எருமைத்தீவுப் பகுதியில் நிற்பதாகத் தகவல் கிடைத்த நிலையில், பொலிசாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்ட போதும் அவர்கள் குறித்த இடத்திற்கு வரவில்லை.
இந்நிலையில், ஊர்மக்கள் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோது, வாகனம் ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல்கொட்டகை ஒன்றை இரவு வேளையில் அமைத்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் விடயத்தை வினவியபோது, காற்றாலைத் திட்டத்தைக் கொழும்பிலிருந்து பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்புக் கோபுரம் ஒன்றை அமைக்க வந்ததாகத் தெரிவித்தனர்.
‘நாங்கள் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்’ எனத் தெரிவித்து அவர்களின் பொருட்களை மீட்கச் சென்றபோது, ‘தாங்கள் வெளியேறுகிறோம்’ எனத் தெரிவித்து அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டார்கள்.
குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி அரசாங்க அதிபரை மறுநாள் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் தனக்கு ஏதும் தெரியாது எனப் பதிலளித்தார்.
குறித்த காற்றாலைத் திட்டத்தினால் கிராஞ்சி, பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் 2,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
குறித்த பகுதிகளில் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில், 12 காற்றாலைகளை நிறுவும் இடங்களில் சுமார் 7,000 தென்னங்கன்றுகள் அழிக்கப்படவுள்ளன.
ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில், ஒரு காற்றாலை அமைப்பதற்குச் சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.
ஒரு காற்றாலை 120 அடி நீளம் கொண்டதாகக் காணப்படுகின்ற நிலையில், நிலத்திற்குக் கீழ் சுமார் 60 அடி நீளத்தில் பொருத்தப்படவுள்ளது. மேலும், ஒரு காற்றாலைக்குச் சுமார் 3,000 முதல் 4,000 வரையிலான பொதிகளில் அடைக்கப்பட்ட சீமெந்து செலவாகும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள், வழிபாட்டு இடங்கள் மற்றும் குடிநீர்க் கிணறுகள் என்பன பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மக்கள் வாழும் வளமான பகுதியை அழித்து, அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தைக் கைவிட்டு, குறித்த பிரதேசத்திற்கு மாற்றுக்காணியைத் தெரிவு செய்ய வேண்டும்.
ஆகவே, மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.












