உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதிப்படுத்தும் பட்சத்தில், அதனால் பயனடையும் நாடுகள் அதற்கான செலவினத்தை ஏற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு வ…

உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதிப்படுத்தும் பட்சத்தில், அதனால் பயனடையும் நாடுகள் அதற்கான செலவினத்தை ஏற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை அமெரிக்கா பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும், அந்த சேவைக்காக அமெரிக்காவுக்கு பொருளாதார பிரதிபலன் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் ஹோர்முஸ் நீரிணை, அண்மையில் அதிகரித்துள்ள அமெரிக்கா–ஈரான் பதற்றத்தின் மையமாக மாறியுள்ளது.

இந்த நிலைமையால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் எண்ணெய் விலைகள் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதுடன், சர்வதேச சந்தைகளிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், ஈரானுடனான முந்தைய ஒப்பந்தங்கள் பல முறை மீறப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய ட்ரம்ப், தேவையானால் அமெரிக்கா கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்காது என்றும் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராணுவ பதற்றம் தொடரும் நிலையில், வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன.