வளைகுடாப் பிராந்தியத்தில் நீடித்து வரும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக ஈரானிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நட…
வளைகுடாப் பிராந்தியத்தில் நீடித்து வரும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக ஈரானிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதுடன், அதனை அமுல்படுத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை (11) பிராந்தியத்தில் கப்பல்கள் மீது புதிய தாக்குதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, ஈரான் தலைவர்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது இரு தரப்புக்கும் இடையிலான நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ், அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. எனினும், அந்த ஒப்பந்தம் பின்னர் முறிவடைந்தது.
இந்நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பான உடன்பாட்டை ஈரான் மதிக்கத் தவறியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதேவேளை, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் உள்ளிட்ட தனது வாக்குறுதிகளை அமெரிக்கா நிறைவேற்றவில்லை என தெஹ்ரான் குற்றம் சாட்டுகிறது.
மத்தியஸ்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கா இடைக்கால ஒப்பந்தத்துக்கு மீண்டும் திரும்புவதுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது தொடர்பான விடயமும் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த விடயத்தில் இதுவரை முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என ஈரானிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாக ட்ரம்ப் புதன்கிழமை தெரிவித்திருந்த நிலையில், ஈரானால் அமைக்கப்பட்டுள்ள பாரசீக வளைகுடா நீரிணை ஆணையம், குறித்த நீர்வழி தொடர்ந்து தடுக்கப்பட்டுள்ளதாகவும், ஈரானின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை அது மீண்டும் திறக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்ததிலிருந்து ஈரான் மற்றும் லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஓமன், ஜோர்டான், குவைத், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஜூன் மாத இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் 60 நாட்களுக்கான காலக்கெடுவை நிர்ணயித்திருந்ததுடன், இரு தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் அதனை நீட்டிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்தக் காலத்துக்குள் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் அமெரிக்க தடைகளை நீக்குதல் தொடர்பில் இறுதி உடன்பாட்டை எட்டுவது நோக்கமாக இருந்தது.
எனினும், 60 நாள் காலக்கெடுவை நீட்டிக்க இரு தரப்பும் இணங்கியதாக பாகிஸ்தான் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி துருக்கியின் அனடோலு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை ஈரானிய தரப்பு நிராகரித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை, ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான முக்கிய கடல்வழிப் பாதையாக அமைந்துள்ளது.
இதனிடையே, வளைகுடா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான மாறுபட்ட தகவல்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன், ஒரு பீப்பாய்க்கு 126 அமெரிக்க டொலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது போருக்கு முந்தைய விலையை விட சுமார் 75 சதவீதம் அதிகமாகும்.












