மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக, ஈரான் தொடர்புடைய இலக்குகள் மீது புதிய இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் ம…

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக, ஈரான் தொடர்புடைய இலக்குகள் மீது புதிய இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் பயணித்த கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக சென்ட்காம் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு முன்னதாக, ஈராக்கில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை குறிவைத்து அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இணைந்து நடத்திய தாக்குதல்கள் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து மோதல் மேலும் விரிவடைந்துள்ள நிலையில், அண்மைய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியபோது, அந்த மோதல் சில வாரங்களுக்குள் முடிவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். எனினும், தற்போது ஐந்து மாதங்களைக் கடந்தும் மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் முடிவுக்கு வருவதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

புதன்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய தாக்குதல்களுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே, அமெரிக்கப் படைகள் மீது ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல் முயற்சிக்கு உரிய பதிலடி வழங்கப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 13 இரவுகள் நடைபெற்ற தீவிர வான்வழித் தாக்குதல் நடவடிக்கையை, கடந்த வார இறுதியில் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியிருந்தது. அந்தத் தாக்குதல்கள் ஈரானின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் இராணுவத் தளங்களை குறிவைத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், உயிரிழப்புகள் மற்றும் சேதம் தொடர்பான முழுமையான விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.