யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை சந்தித்துள்ளனர்.இந்த சந்திப்பு நேற்று(03…
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை சந்தித்துள்ளனர்.இந்த சந்திப்பு நேற்று(03.07.2026) சென்னையில் இடம்பெற்றுள்ளது.
தொல். திருமாவளவன் உடனான கலந்துரையாடல்
சென்னையிலுள்ள வி.சி.க. தலைமைப் பணிமனையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, ஈழத்தமிழர்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள், வடக்கு - கிழக்கு மக்களின் சமகாலப் பிரச்சினைகள் மற்றும் தமிழக - ஈழத்தமிழர்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனநாயகத் தமிழர் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ், அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளரும் சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் உள்ளிட்டவர்கள் இதில் கலந்துக் கொண்டுள்ளனர்.
அத்துடன், தொல். திருமாவளவனுடனான சந்திப்புக்கு முன்னதாக நேற்று(03), தமிழ்த் தேசியப் பேரவையின் தூதுக்குழுவினர் தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
இதன்போது ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை, அதற்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் தாயக மக்களின் தற்போதைய தேவைகள் உள்ளிட்ட மிக முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

