நேபாளத்தையும் திபெட்டையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காணாமல் போனவர்கள் சிட்னி நகரில் வசித்து வந்த 47 வயதுட…
நேபாளத்தையும் திபெட்டையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காணாமல் போனவர்கள் சிட்னி நகரில் வசித்து வந்த 47 வயதுடைய சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி 42 வயதுடைய ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களின் மகன்களான 14 வயதுடைய அஸ்வின், 11 வயதுடைய ஆருஷ் ஆகியோர் ஆவர்.
சந்திரசேகரன் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பிறந்து பின்னர் ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறியவர் ஆவார். இவர்களின் பிள்ளைகள் இருவரும் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.
இந்த வெள்ளத்தில் சிக்குண்டபோது, சந்திரசேகரன், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இந்தியாவில் இருந்து வந்த யாத்திரிகர்கள் குழுவுடன் இணைந்து, நேபாளத்திலுள்ள ‘கைலாச கூட’ பர்வதத்தை தரிசிக்கச் சென்று கொண்டிருந்தனர். இமயமலைப் பிராந்தியத்தில் அமைந்துள்ள கைலாச பர்வதம் மற்றும் மானசரோவர் ஏரியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் ‘கைலாச - மானசரோவர் யாத்திரை’ என்பது ஆசியாவிலுள்ள மிகவும் கடினமான அதேவேளை மிகவும் புனிதமான கலாச்சார மற்றும் மதரீதியான யாத்திரைப் பயணமாகும்.
சந்திரசேகரன், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். இவர்கள் இந்த இந்திய யாத்திரிகர்கள் குழுவில் ‘இமயமலை பனிச்சரிவு சாகசங்கள்’ (Himalayan Glacier Adventures) நிறுவனம் ஊடாக இணைந்துகொண்டுள்ளனர்.
சந்திரசேகரன் குடும்பத்துடன் ‘கைலாச கூட’ பர்வதத்தைத் தரிசிக்க மேலும் 15 இந்தியர்கள் நேபாளத்திற்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழு வெள்ளத்தில் சிக்கியிருக்கக் கூடுவது நேபாள - சீன எல்லைக்கு அருகில் உள்ள ‘ரசுவாகாதி’ பகுதியில் வைத்துத்தான் எனச் சந்தேகிக்கப்படுகிறது. நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 43 ஆகும்.
நேபாளத்தையும் திபெட்டையும் உலுக்கிய அந்தப் பெருவெள்ளத்திற்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,000 க்கும் அதிகமாகும்.

