இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) பெயர் பலகையைப் பயன்படுத்தி உணவகங்கள் பலவற்றில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அனுராதபுரம், கோமரங்கடவள பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இலங்கை போக்குவரத்து சபையி…

இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) பெயர் பலகையைப் பயன்படுத்தி உணவகங்கள் பலவற்றில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அனுராதபுரம், கோமரங்கடவள பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இலங்கை போக்குவரத்து சபையின் உத்தியோகபூர்வ பெயர் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை நம்பி உணவகத்திற்கு வரும் பயணிகளிடம், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வழக்கமான விலையை விட ரூ. 30 முதல் ரூ. 40 வரை கூடுதலாக அறவிட்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பயணிகள் விசனம் மேலும், குறித்த உணவகத்தில் அடிப்படை வசதியான கழிப்பறை வசதிகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதில்லை என்றும், சுகாதாரமற்ற முறையில் காணப்படுகின்றது என்றும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த உணவகத்திற்கு அனுராதபுரம், அக்கரைப்பற்று, கொழும்பு, கண்டி, குருநாகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் பெயர் பலகையை பார்த்து பயணிகள் பலர், இவ்வாறான விலை ஏற்றத்தாலும் சுகாதாரமற்ற சூழலாலும் பெரும் அசெளகரியங்களுக்கும் நிதிச் சுரண்டலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

எனவே, இந்த விடயம் தொடர்பில், உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கும், நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Yoosuf அவரால் எழுதப்பட்டு, 05 August, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.