இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகள் வழங்கி இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்களான ஊடகவியலாளர்க…

இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகள் வழங்கி இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்களான ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கொழும்பு வெள்ளவத்தை மிராஜ் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று இடம்பெற்றது.

இலண்டனைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் சமூகச் சேவையாளருமான சீவரட்ணம் முறேஸின் நிதி அனுசரணையில், 65 ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகளும், 25 ஊடகவியலாளர்களுக்குக் கைப்பேசிகளும் எனச் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கப்பட்டு இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ். ஸ்ரீகஜன் மற்றும் செயலாளர் கே. ஜெயந்திரன் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நாட்டியக் கலைமணி ஸ்ரீமதி பவானி குகப்பிரியாவின் நெறியா்கையில், தியாகராஜ கலைக்கோவில் மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், லண்டன் பிரபல தொழிலதிபரும் சமூகச் சேவையாளருமான சீவரட்ணம் முறேஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சீவரட்ணம் முறேஸின் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு ஆளுயர மலர்மாலைகள் மற்றும் தலைக்கீரிடம் அணிவிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தப்பட்டதுடன், அவரின் சமூகச் சேவைகளைப் பாராட்டிப் பாராட்டுக் கவிதை காணொலியும் வெளியிடப்பட்டது.

அவர் தனது உரையின்போது, தான் சிறுவயதில் பட்ட துன்பங்களையும், வறுமையில் வாடிய தனது தாயார் தன்னை வளர்க்கப் பட்ட கஷ்டங்களையும் மிகவும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியான எம். செந்தில்நாதன், மூத்த ஊடகவியலாளரும் 'முரசு' பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என். வித்தியாதரன் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த. வீரசுதன் ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன், முன்னாள் பிரதம ஆசிரியர்கள் மற்றும் மூத்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்த இந்நிகழ்விலேயே, லண்டனைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சீவரட்ணம் முறேஸின் நிதி அனுசரணையில் நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த  தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் 90 பேருக்கு மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகள் வழங்கப்பட்டன.